அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
இதில் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அடிலெய்டு ஓவலில் அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், இங்கிலாந்தும் கோதாவில் குதிக்கின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகளை பதம் பார்த்தது. தென்ஆப்பிரிக்காவுடன் மட்டும் தோல்வியை தழுவிய இந்திய அணி தனது பிரிவில் 8 புள்ளியுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால்பதித்தது.
கோலி-சூர்யா கூட்டணி வெற்றி பெற்ற ஆட்டங்களில் விராட் கோலியும் (3 அரைசதத்துடன் 246 ரன்), சூர்யகுமார் யாதவும் (3 அரைசதத்துடன் 225 ரன்) ஹீரோவாக ஜொலித்தனர். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை துவம்சம் செய்யும் சூர்யகுமார் யாதவின் பிரமாதமான ஷாட்டுகள் பரவசமூட்டுகின்றன.
இதே போல் திரில்லிங்கான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 82 ரன்கள் விளாசி வெற்றியை தேடித் தந்ததும் சிலிர்க்க வைத்தது. இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பேட்டிங் மீது இமாலய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோலி இன்னும் 42 ரன்கள் எடுத்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 4 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இதே போல் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோரும் நேர்த்தியான தொடக்கத்தை தரும் பட்சத்தில் இந்தியாவால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.
2011-ம் ஆண்டுக்கு பிறகு எந்தவித உலக கோப்பையும் வெல்லாத இந்திய அணி அந்த மகத்தான தருணத்தை அடைவதற்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகிறது.
அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (10 விக்கெட்) மட்டும் தொடர்ச்சியாக விக்கெட் அறுவடை நடத்துகிறார்.
புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோரும் கைகொடுத்தால், எதிரணியை அச்சுறுத்தலாம் விக்கெட் கீப்பர் யார்? விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பது யார் என்பதில் ‘சஸ்பென்ஸ்’ நீடிக்கிறது. முதல் 4 ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இருந்தார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக்கில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட இறங்கினார். அரைஇறுதியில் யாருக்கு வாய்ப்பு என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திற்கு முன்பாக நாங்கள் அரைஇறுதியில் யாருடன் மோதப்போகிறோம் என்பது தெரியாமல் இருந்தது. அதனால் நியூசிலாந்து அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போது மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சை அடித்து நொறுக்குவதற்கு ஒரு இடக்கை பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கினோம்.
ஆனால் இன்று ஆட்டத்தில் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது’ என்று கூறி நழுவினார்.
பயிற்சியின் போது பந்து கையில் தாக்கியதில் லேசான வீக்கம் ஏற்பட்டது. அது சரியாகி விட்டது. இப்போது நன்றாக இருக்கிறேன் என்றும் ரோகித் சர்மா குறிப்பிட்டார்.
இங்கிலாந்து எப்படி? ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர்12 சுற்றில் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை பந்தாடியது. அயர்லாந்துக்கு எதிராக 5 ரன்னில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 7 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் முன்னிலையில் இருந்ததால் தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்று அரைஇறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது.
இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்குகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ஜோஸ் பட்லர் (ஒரு அரைசதத்துடன் 125 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (ஒரு அரைசதத்துடன் 119 ரன்) தவிர்த்து வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
என்றாலும் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் ஆகிய அதிரடி சூரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் சாம் கர்ரன் (10 விக்கெட்), கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். காயத்தால் அவதிப்படும் மார்க்வுட் (9 விக்கெட்), டேவிட் மலான் ஆடுவது சந்தேகம் தான்.
அவர்களது காயத்தன்மை இன்று எப்படி இருக்கிறது என்பதை பார்த்து முடிவு செய்வோம் என்று அந்த அணியின் கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார்.
எப்படி பார்த்தாலும் இரு அணிகளும் கிட்டத்தட்ட சரிசம பலத்துடனே தென்படுகிறது. அதனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 10-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவே வெற்றி கண்டுள்ளது.
பிற்பகல் 1.30 மணிக்கு… போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப்சிங். இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), அலெக்ஸ் ஹாலெஸ், டேவிட் மலான் அல்லது பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. அடிலெய்டு மைதானம் எப்படி? இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் இதுவரை 6 ஆட்டங்கள் நடந்துள்ளன.
4-ல் முதலில் பேட் செய்த அணிகளும், 2-ல் இரண்டாவது பேட் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இதில் இந்திய அணி வங்காளதேசத்துக்கு எதிராக 184 ரன்கள் குவித்து மழை பாதிப்புக்கு இடையே 5 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றதும் அடங்கும். இந்த ஆடுகளம் ஓரளவு பேட்டிங்குக்கு ஒத்துழைக்கக்கூடியது. ஆனால் ஸ்டேடியத்தின் சுற்றளவு மாறுபட்டது.
ஒரு பக்கம் பவுண்டரி தூரம் அதிகமாகவும், இன்னொரு பக்கம் குறைவாகவும் இருக்கும். இதை சாதுர்யமாக கணித்து விளையாடும் வீரர்களே இங்கு சாதிக்க முடியும். இது குறித்து இந்திய கேப்டன ரோகித் சர்மா கூறும் போது, ‘ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது சில மைதானங்களில் நேர் பகுதி பவுண்டரி தூரம் அதிகமாக இருக்கும். சில மைதானங்களின் எல்லைக்கோடு தூரம் குறைவாக இருக்கும்.
இதற்கு ஏற்ப வெகு சீக்கிரமாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்றார். இந்த மைதானத்தில் ஒட்டுமொத்தத்தில் இதுவரை நடந்துள்ள 11 சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலும் ‘டாஸ்’ ஜெயித்த அணிகள் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது. சிறிய மைதானத்தை வெறுக்கும் சூர்யகுமார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சூர்யகுமார் யாதவின் அச்சமில்லா அதிரடியான அணுகுமுறை குறித்து அனைவரும் பேசுகிறார்கள்.
இதுவே அவருக்கு நெருக்கடியாக இருக்குமா? என்று கேட்கிறீர்கள். இந்த மாதிரி ஆடுவது தான் அவரது இயல்பு. மற்றபடி இதை அவர் கூடுதல் நெருக்கடியாக நினைப்பதில்லை. இந்த தொடரில் மட்டும் அவர் இவ்வாறு விளையாடவில்லை. கடந்த ஓராண்டாகவே இப்படி தான் ஆடிக்கொண்டு இருக்கிறார்.
அதிரடியாக மட்டையை சுழற்றுவது தான் அவருக்கு பிடிக்கும் என்பதை உங்களுக்கு பார்த்தாலே தெரியும். சூர்யகுமார் யாதவ் பெரிய மைதானங்களில் விளையாடுவதை விரும்புவார். சிறிய மைதானங்களில் ஆடுவதை வெறுக்கிறார். இதை ஒரு முறை என்னிடமே சொல்லி இருக்கிறார். சிறிய மைதானமாக இருக்கும் போது, பந்தை விரட்டுவதற்கு போதுமான இடைவெளியை பார்க்க முடியாது.
அதே சமயம் மைதானம் பெரிதாக இருந்தால் இடைவெளி நிறைய கிடைக்கும் என்று நம்புகிறார். இது தான் அவரது பலமே’ என்றார். மேலும் ரோகித் சர்மா கூறுகையில், ‘நாக்-அவுட் ஆட்டங்கள் மிகவும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டுள்ளோம். ஏனெனில் ‘நாக்-அவுட்’ ஆட்டத்தில் விளையாடும் போது, ஒரு முறை மட்டுமே சிறப்பாக விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதற்காக அந்த ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு வீரரின் திறமையை முடிவு செய்ய முடியாது’ என்றும் குறிப்பிட்டார்.
‘இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுவதை பார்க்க விரும்பவில்லை’- பட்லர் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நிச்சயமாக, இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதை பார்க்க விரும்பவில்லை. இதை நடக்க விடாமல் செய்வதற்கு எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இந்தியாவின் மகிழ்ச்சியை சிதைக்க முயற்சிப்போம். இந்தியா சிறந்த அணி. அத்தகைய சிறந்த அணிக்கு எதிராக அரைஇறுதியில் விளையாட இருப்பது ஒவ்வொருவருக்கும் உற்சாகம் அளிக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் சிறந்த பவுலர். ஆனால் அவரை கண்டு எனக்கு பயமில்லை. சூர்யகுமாரின் பேட்டிங்கை பார்க்க நன்றாக இருக்கிறது. நிறைய வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்கிறார்.
அதே சமயம் அவரை வீழ்த்துவதற்கு ஒரு நல்ல பந்து தான் தேவை. அதை நாங்கள் செய்வோம். வரலாற்றை புரட்டி பார்த்தால், அடிலெய்டு மைதானத்தில் 165 ரன்கள் சவாலான ஸ்கோராக இருக்கும் தெரியும். ஆனால் இந்த மாதிரி குறிப்பிட்ட ஸ்கோரை நாங்கள் விரும்பவில்லை. வெற்றிக்கான ஸ்கோரை எடுக்க விரும்புகிறோம். இந்த ஆடுகளத்தை பார்க்கும் போது 40 ஓவரும் ஒரே மாதிரியான தன்மையுடன் இருக்கும் என்று தெரிகிறது’ என்றார்.