நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது.
மிர்புர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது. நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
எனது கை விரலில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. இதனால் நான் பேட்டிங் செய்ய வந்தேன். வங்காளதேச அணியின் 6 விக்கெட்டுகளை 69 ரன்னுக்குள் வீழ்த்திய பிறகு 271 ரன்கள் எடுக்க விட்டது மிகப்பெரிய தவறாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை. தொடக்கத்தில் அபாரமாக வீசினார்கள்.
மிடில் ஓவரிலும், கடைசி கட்டத்திலும் ரன்களை வாரி கொடுத்தனர். இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஹசன் மிராஸ், மகமதுல்லா சிறப்பாக ஆடினார்கள். அவர்களது பார்ட்னர் ஷிப்பை உடைக்க முடியவில்லை. எங்களது அணியில் உள்ள சில வீரர்களுக்கு காயம் பிரச்சினை இருந்தது. இதன் அடிப்படை காரணம் குறித்து யோசிக்க வேண்டும்.
வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாமல் அணியில் விளையாடுகிறார்கள். அப்படி இருந்தால் உங்களால் வெற்றி பெற முடியாது. இந்திய அணிக்காக விளையாடும்போது முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். இது குறித்து ஆய்வு செய்வது அவசியம். வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்க முடியாது. அவர்களுடைய பணிச் சுமையையும் நாம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்