வெலிங்டன், நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக பணியாற்ற உள்ளனர். இதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. சமீபத்தில் இவ்விரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியுடன் வெளியேறிய பிறகு விளையாடப்போகும் முதல் தொடர் இதுவாகும்.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் படை களத்தில் குதிக்கிறது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட் போன்ற அதிரடி சூரர்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
உலக கோப்பையில் கலக்கிய சூர்யகுமாருக்கு, 20 ஓவர் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்தவரான முகமது ரிஸ்வானின் (பாகிஸ்தான்) சாதனையை தகர்க்க இன்னும் 286 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த தொடரில் அதை நெருங்குவதற்கு வாய்ப்புள்ளது.
பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், புயல்வேக பவுலர் உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். அடுத்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இளம் வீரர்களை கொண்டு வருவதற்கான முதற்படிக்கட்டாக இந்த தொடர் இருக்கும்.
நியூசிலாந்து எப்படி? நியூசிலாந்து வலுவான அணியாக களம் இறங்குகிறது. 20 ஓவர் உலக கோப்பையில் ஆடிய வீரர்களில் டிரென்ட் பவுல்ட் மட்டுமே இல்லை. மற்றபடி பேட்டிங்கில் டிவான் கான்வே, பின் ஆலென், கிளென் பிலிப்ஸ், கேப்டன் வில்லியம்சன், டேரில் மிட்செல், பந்து வீச்சில் லோக்கி பெர்குசன், டிம் சவுதி, சான்ட்னெர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். நியூசிலாந்து மைதானங்கள் சிறியவை என்பதால் ரன்வேட்டை நடத்த முடியும். அதற்கு வெலிங்டனும் விதிவிலக்கல்ல. 2019-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
வானிலையை பொறுத்தவரை காலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் போட்டி உள்ளூர் நேரப்படி இரவில் நடப்பதால் அந்த சமயத்தில் மழை இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் இந்தியாவும், 9-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2020-ம் ஆண்டில் இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது.
அதே போன்று மறுபடியும் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். பகல் 12 மணிக்கு…
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் அல்லது சஞ்சு சாம்சன் அல்லது தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல் அல்லது உம்ரான் மாலிக், புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல், நியூசிலாந்து: டிவான் கான்வே, பின் ஆலென், வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, சோதி, ஆடம் மில்னே, லோக்கி பெர்குசன்.
இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அத்துடன் இதற்கான பிரத்யேகமான உரிமத்தை பெற்றுள்ள பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்திலும் பார்க்கலாம்.