செங்கல்பட்டில், தமிழ்நாடு அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான சீனியர் என்கின்ற எலைட் பிரிவில் 19 முதல் 39 வயதுக்கு உட்பட்ட 200க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் 81 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களுக்கான போட்டியில் தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி மாணவி குணவர்தினி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.
இவர் மத்திய பிரதேச தலைநகர் கோபாலில் நடைபெற உள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 70 முதல் 75 கிலோ எடை பிரிவில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவி பிரீத்தி இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
இவர்களையும் பயிற்சி அளித்த தஞ்சை மாவட்ட குத்து சண்டைக் கழக பொதுச்செயலாளர் ஜலேந்திரனையும் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட், குத்து சண்டைக் கழக மாவட்ட தலைவர் அந்தோணிசாமி, துணை தலைவர் சிவா ஆகியோர் பாராட்டினர்.