தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு 2022-23-ம் ஆண்டிற்கு 2 திட்டங்களுடன் கூடிய கொரோனா உதவி மற்றும் தொழில் முனைவோருக்கான நிவாரண திட்டத்தை அறிவித்து ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது.
இதில் மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நலிந்த தொழில்முனைவோர்கள் மீண்டும் தொழில்களை நிறுவிட மற்றும் புதிய நிறுவனத்தை தொடங்கிட அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
ரூ.5 கோடி 2020-21-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், உரிமையாளர் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சேவைத்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன்மூலம் பயன்பெறலாம். அதிகபட்ச திட்ட செலவு ரூ.5 கோடியாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாகவும் இருக்கும்.
இந்த மானியத்திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்பவர்களுக்கானது.
இத்திட்டத்திற்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கலை மேற்கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொரோனா தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதியுடையவர்கள்.
மின்னஞ்சல் மூலதன மானியமாக எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு வழங்கப்படும். இந்த திட்டம் 2022-23-ம் ஆண்டிற்கு மட்டும் நடைமுறையில் இருக்கும்.
இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்ட தொழில்மையம், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்-6 என்ற முகவரியை அணுக வேண்டும். tnjdic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் பெறலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 Comment
THANKS FOR INFORMACTION