தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை நேற்று 4 ராஜவீதிகளில் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கருட சேவை விழா
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் 3-வதாக விளங்கும் மேலசிங்க பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களில் கருடசேவை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, ராமானுஜதர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
வைகாசி திருவோண நட்சத்திரம்
ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் 24 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி 88-வது ஆண்டாக இந்த ஆண்டு கருடசேவை நேற்று நடந்தது. முன்னதாக வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
24 பெருமாள்கள் புறப்பாடு
அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலில் சென்றார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள் லட்சுமியுடன் வந்தார். இவர்களை தொடர்ந்து நரசிம்ம பெருமாள், வெண்ணாற்றங்கரை மணிக்குன்னப் பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கொண்டிராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத்தெரு பஜார் ராமசாமி பெருமாள், எல்லையம்மன் கோவில்தெரு ஜனார்த்தன பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோவிந்தராஜ பெருமாள், மேலவீதி ரெங்கநாத பெருமாள், விஜயராம பெருமாள், நவநீதகிருஷ்ணன், சக்காநாயக்கன்தெரு பூலோக கிருஷ்ணன், மகர்நோம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்ட ராமசாமி பெருமாள், சுங்கான்திடல் லட்சுமி நாராயண பெருமாள், கரந்தை வாணியத்தெரு வெங்கடேச பெருமாள், கொள்ளுப்பேட்டைத்தெரு வேணுகோபாலசாமி ஆகிய 24 பெருமாள்களும் கருடவாகனத்தில் புறப்பட்டு தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
1 Comment
THANKS FOR INFORMACTION