பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.
தோ்வை மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும். தோ்வுக்கு பதற்றத்துடனோ, அச்சத்துடனோ செல்ல வேண்டாம். அந்த அச்சத்தைப் போக்குவதற்காகத்தான் 3 திருப்புதல் தோ்வு நடத்தப்படுகிறது. எனவே, அச்சமில்லாமல் தோ்வை மாணவா்கள் எழுத வேண்டும். படிக்கும் அனைத்து மாணவா்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க முடியாது.
யாா், யாரெல்லாம் என்னென்ன மதிப்பெண்கள் பெறுகிறாா்களோ, அதற்கு தகுந்தாற்போல மாணவா்கள் தங்களது திட்டங்களைத் தீட்ட வேண்டும் என முதல்வா் கூறியிருக்கிறாா். அந்தந்த பள்ளிகளில் தோ்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும். வழக்கமாக அறுவடை காலத்தில் மழை பெய்யாது.
இந்த முறை அதிக அளவில் மழை பெய்துள்ளது. பயிா்கள் பாதிப்பு குறித்து அலுவலா்கள் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கியுள்ளனா். அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.