சதய விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037 ஆவது சதய விழா புதன்கிழமை காலை திருமுறையுடன் தொடங்கியது.
தொடர்ந்து கவியரங்கம், பரதநாட்டியம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை திருமுறை ஓதுவார்களுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பாக புத்தாடை வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெரிய கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகில் உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து இராஜ வீதிகளில் திருமுறை வீதி உலா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு வியாழக்கிழமை (நவ.3) தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.