Site icon Thanjavur News

P.Chidambaram has accused the central budget of not giving special attention to the recovery of small and micro industries.

மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்க சிறப்பு கவனம் செலுத்தவில்லை என ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று தஞ்சாவூர் தொழில் வர்த்தக சபை சார்பில் மத்திய பட்ஜெட் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு சபையின் தலைவர் மாறவர்மன் தலைமை தாங்கினார். செயலாளர் குகனேஸ்வரன், மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய முன்னாள் துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

உலக வர்த்தகம் சுருங்கி விட்டது உக்ரைன் போர் நடந்து வரும் இந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலை குறித்து எந்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளின் வர்த்தகம் சுருங்கி வருகிறது.

உலக வர்த்தகம் குறைந்து வருவதாக உலகில் உள்ள மற்ற நாடுகளின் நிதி மந்திரிகள் பேசி வருகின்றனர். ஆனால் இந்திய நிதி மந்திரி மட்டும் நேர்மறையாக பேசி வருகிறார்.

வர்த்தக பற்றாக்குறை இந்த பட்ஜெட்டின் மூலம் நாட்டின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என நிதி மந்திரி கூறினார். ஆனால் முதல் காலாண்டு தொடங்கி 4 காலாண்டுகளிலும் சராசரியான வளர்ச்சி 7 சதவீத்துக்கும் குறைவாகவே உள்ளது. எனவே வளர்ச்சி எப்படி இருக்க முடியும்? இந்தியா-சீனா இடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் 10 ஆயிரம் கோடி டாலர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதேபோலத்தான் மற்ற நாடுகளின் வர்த்தகமும் பற்றாக்குறையாகவே உள்ளது. சிறப்பு கனவம் செலுத்தவில்லை இந்தியாவில் தனிநபர் நுகர்வு, தொழில் முதலீடு, அரசு முதலீடு ஆகியவற்றில் தனிநபர் நுகர்வு குறைந்துள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்க யாரும் அதிகம் முன்வருவது இல்லை. அரசு முதலீடு மட்டுமே நாட்டை வழிநடத்துகிறது. இந்த அரசின் முதலீடு அறிவிப்பும், செயல்பாடும் வித்தியாசப்படுகிறது. கொரோனா காலத்துக்குப்பின் சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

அதனால் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது. சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்க பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தவில்லை.

ஜி.எஸ்.டி.யால் பாதிப்பு கடந்த 2005-ம் ஆண்டு வாட் வரி அமல்படுத்தினோம். யாருக்கும் பாதிப்பு வரவில்லை. பின்னர் ஜி.எஸ்.டி. வரிக்கான வரைவு திட்டத்தை நான்தான் கொண்டு வந்தேன்.

அதற்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜி.எஸ்.டி.-ஐ அவசர, அவசரமாக அமல்படுத்தினார்கள். அப்போது சில குறைபாடுகளை சுட்டிக்்காட்டினேன். ஆனால் யாரும் கேட்கவில்லை. இன்று ஜி.எஸ்.டி. வரியால் பல எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகளை அரசு எதிர்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலியான சலுகைகள் பட்ஜெட்டில் தனிநபர் வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரிக்கு விலக்கு என போலியாக சலுகைகளை மத்திய நிதி மந்திரி அறிவித்துள்ளார். சேமிப்பையும், செலவையும் ஒப்பட்டு சேமிப்பே கூடாது என்பது போல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் உணவுப்பொருள், உரங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் வருங்காலத்தில் உணவு பொருட்களின் விலை உயர்வு ஏற்படும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version