விநாயகர் சதுர்த்தி தஞ்சை பூக்காரத்தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு திருச்சி, ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர், மணப்பாறை மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்களின் விலை நேற்று அதிகமாக இருந்தது.விநாயகர் சதுர்த்திக்கு பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பெய்த வரும் மழையின் காரணமாக தஞ்சை பூச்சந்தைக்கு பூக்கள் வரத்து குறைவாகவே இருந்தது. ஆனால் தேவை அதிகமாக இருந்தது.
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தஞ்சை பூச்சந்தையில் ஏராளமானோர் திரண்டனர். பூக்கள் விலை உயர்வு இதனால் பூக்களின் விலையும் அதிகரித்தது. நேற்றுமுன்தினம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.600-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800-க்கும், ரூ.400-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1,000-க்கும், ரூ.400-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.600-க்கும் விற்பனையானது.இதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது.
சம்பங்கி ரூ.300-க்கும், ஆப்பிள்ரோஸ் ரூ.250-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், அரளி ரூ.300-க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் அதிகஅளவில் பூச்சந்தைக்கு வந்து விதவிதமான பூக்களை வாங்கி சென்றனர்.