திருக்காட்டுப்பள்ளி; நடப்பு ஆண்டில் 3-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உபரி நீர் திறப்பு கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் பலத்த மழை காரணமாக காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு நேற்று மாலை நீர்வரத்து 1லட்சத்து 27ஆயிரத்து330 கன அடியாகவும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 1லட்சத்து 26, ஆயிரத்து 617 கன அடியாகவும் இருந்தது.
திருச்சி மாவட்ட முக்கொம்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில் 37ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.கொள்ளிடத்தில் 91, ஆயிரத்து 253கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதி பாசனத்துக்கு காவிரி ஆற்றில் 3009கன அடி, வெண்ணாற்றில் 4515கன அடி, கல்லணைகால்வாயில் 2513கன அடி, கொள்ளிடத்தில் 26753 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வறட்சியான பகுதிகளுக்கு… முக்கொம்பில்இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்ணீரும் சேர்ந்து நேற்று மாலை பொதுப்பணித்துறை தகவலின் படி 1லட்சத்து18 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. நடப்பு ஆண்டில் 3-வது முறையாக கொள்ளிடத்தில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அடுத்து தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை காலங்களில் மேலும் கூடுதல் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்போது நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உருவாகும் என்றாலும், தொடர் மழையால் கொள்ளிடத்தில் பெருகி ஓடி கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்