41 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….மதுரை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை துணை பேராசிரியராக சையது தாஹிர் உசேன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஆசிரியர் உட்பட 41 மாணவிகள் பாலியல் ரீதியான புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டதில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாஹிர் உசேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இது குறித்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சையது தாகிர் உசேன் தெரிவித்ததாவது, மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகளையும், கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவும் புகார் வழங்கியதற்காக என்னை பழிவாங்கும் நோக்கோடு முறையான விசாரணை நடத்தப்படாமல் இப்படி நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். என்று குற்றம் சுமத்தி இருக்கிறார்.அவரது இந்த குற்றச்சாட்டை மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
துணை பேராசிரியர் சையது தாஹிர் உசேன் பாலியல் அத்துமிகளில் ஈடுபடுவதாக சென்ற ஆறாம் தேதி மயக்கவியல் துறை மாணவிகள் புகார் வழங்கினர். தொடர்ந்து, 8ம் தேதி அவர்களிடம் இருந்து எடுத்துபூர்வமாக புகார் தரப்பட்டது. ஆபாசமாக பேசுவது, தவறான எண்ணத்தில் தகாத இடங்களில் கை வைப்பது என்று தொடர்ந்து, அத்துமீறி பாலியல் தொல்லை வழங்குவதாக மாணவிகள் அழுதபடி புகார் வழங்கினர் என்று தெரிவித்திருக்கிறார் ரத்தினவேலு.
இந்த பாலியல் புகார் தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை மேற்கொண்டது. இதில் 41 மாணவிகள் பங்கேற்று பதிலளித்தனர். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தான் பேராசிரியர் சையது தாஹிர் உசேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல் தெரிவித்திருக்கிறார்.