தஞ்சாவூர் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
நாகநாதசுவாமி கோவில் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. அப்போது பஞ்ச மூர்த்திகள் சிறப்பு புஷ்பலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.
சுகாதார பணிகள் இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி வி. சிவலிங்கம், துணைத்தலைவர் உதயாஉப்பிலி, ஆர். பாலா உள்ளிட்ட பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மகேஸ்வரிதுரைராஜ், திருநாகேஸ்வரம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் பழனிச்சாமி மற்றும் திரளான தி.மு.க. நிர்வாகிகள், கோவில் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என கோஷம் எழுப்பியவாறு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் நான்கு வீதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் (பொறுப்பு) தா. உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.