சென்னைபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்கு அம்சமாகவும், தகவல் களஞ்சியமாகவும் விளங்கும் யூடியூப் அவ்வப்போது பல புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இனி யூடியூப் தளத்தில் 4கே தரத்திலான வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் பயனர்கள் அதற்கு பிரீமியம் சந்தா வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது இடையே வரும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சந்தா தொகை கட்டி பிரீமியம் பயனாளர் என்ற தகுதியை பெறுகின்றனர். விளம்பரங்களை தவிர்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா என கருதி பயனர்கள் பிரீமியம் சந்தாவை தவிர்ப்பதும் உண்டு.
இந்த நிலையில் 4கே தரத்திலான வீடியோக்களுக்கும் கட்டண நடைமுறையை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரணமாக செல்போன்களில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு இந்த 4கே தரம் அதிகம் தேவைப்படாது.
ஆனால், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பெரிய திரைகளில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக 4கே தரம் தேவைப்படும். இதுவரையில் 4கே தரத்தில் ஸ்மார்ட் டிவிகளில் வீடியோ பார்த்து வந்தவர்களுக்கு யூடியூபின் இந்த கட்டண நடைமுறை குறித்த செய்தி அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.