இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இலங்கை வீரர் கசுன் ரஜிதா வீசிய முதல் ஓவரில் 17 ரன்கள் குவித்த நிலையில், மகேஷ் தீக்சனா வீசிய 3-வது ஓவரில் சுப்மன் கில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 5 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து அணியின் கேப்டன் பாண்ட்யா இஷன் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடி வந்த இஷன் கிஷன் 37 ரன்னில் ஹசரங்கா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதையடுத்து தீபக் ஹூடா பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடி வந்த பாண்ட்யா 27 பந்தில் 29 ரன்னுக்கு அவுட் ஆனார். இறுதி கட்டத்தில் தீபக் ஹூடா அதிரடி காட்டி சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் தீபக் ஹூடா(23 பந்துகள், 41 ரன்கள்), அக்ஸர் பட்டேல்(20 பந்துகள், 31 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பதூம் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் களமிறங்கினர். இன்றைய டி-20 அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய இந்திய பவுலர் ஷிவம் மாவி வீசிய பந்தில், பதூம் நிசாங்கா(1 ரன்) போல்ட் ஆனார். ஷிவம் மாவி வீசிய 4-வது ஓவரில், தனஞ்ஜெயா டி சில்வா(8 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த அசலங்கா(12 ரன்கள்), பனுகா ராஜபக்சா(10 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறியதால், இலங்கை அணி தடுமாறியது. இதையத்து கேப்டன் தசுன் சனகா, ஹசரங்காவுடன் ஜோடி சேர்ந்தார். தசுன் சனகா 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் என அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார்.
மறுபுறம் ஹசரங்கா 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில், ஷிவம் மாவியின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். தசுன் சனகா(27 பந்துகள், 45 ரன்கள்) இந்திய வீரர் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். சமிகா கருணாரத்னே (23 ரன்கள்) ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.