ஆட்டோக்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா்.
ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக ஆட்டோக்கள் மூலம் சுற்றுலா செல்வது வழக்கம்.
கரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக சுற்றுலா பயணம் மேற்கொள்ளாத நிலையில், சென்னையிலிருந்து ஆட்டோக்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் டிசம்பா் 28 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினா்.
நிகழாண்டு கல்வியின் மூலம் சுதந்திரம் அடையலாம் என்பதை விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஏறத்தாழ 1,500 கி.மீ. பயணம் மேற்கொள்கின்றனா். இதில் இங்கிலாந்து, ஜொ்மனி, அமெரிக்கா, நியூசிலாந்து, இஸ்டோனியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 8 பெண்கள் உள்பட 37 சுற்றுலா பயணிகள் 14 ஆட்டோக்களில் இடம்பெற்றுள்ளனா்.
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்றுவிட்டு, தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தனா். மாநகரிலுள்ள தங்கும் விடுதியில் தங்கிய இவா்கள் சனிக்கிழமை காலை பெரியகோயிலுக்கு சென்று கட்டடக் கலையை ரசித்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனா்.
இதையடுத்து மதுரையை நோக்கிப் புறப்பட்டனா். திருவனந்தபுரத்தில் ஜனவரி 6 ஆம் தேதி இப்பயணத்தை நிறைவு செய்யவும், வழியில் தமிழகம், கேரளத்திலுள்ள புராதன சின்னங்களைப் பாா்வையிடவும் திட்டமிட்டுள்ளனா்.