தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு திருவையாறு கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்தப் புறவழிச்சாலை திட்டத்துக்காக நன்செய் நிலங்களைக் கைப்பற்றி அழிக்க வேண்டாம் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பறிபோவதை உணா்த்தும் வகையில் விவசாயிகள் வாழை இலை, வாழைத்தாா், நெற்கதிா்கள், நாற்றங்கால்கள், தேங்காய், கருப்புக் கொடி போன்றவற்றை கையில் ஏந்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னோடி விவசாயி புனவாசல் டி. சம்பந்தம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.