வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இஷன் கிஷன் இரட்டை சதமும், விராட் கோலி சதமும் அடித்து அசத்தினர்.
மும்பை, இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி வேகமாக ஸ்கோர் செய்து நல்ல தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்தார்.
3ம் வரிசையில் இறங்கிய கோலி, இஷான் கிஷனுடன் இணைந்து சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். அதிரடியாக ஆடிய அவர் 126 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் குறைந்த வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனையை பெற்றார். இவருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுதிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 409 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களம் புகுந்த வங்கதேச அணி 182 ரன்னில் ஆல் அவுட் ஆகி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரட்டை சதம் அடித்த இஷன் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இரட்டை சதம் அடித்த அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், என்ன ஒரு அற்புதமான ஆட்டம்! என்ன ஒரு அற்புதமான ஆட்டம்! இஷன் கிஷன் ஆடிய இந்த இன்னிங்ஸ்க்கு எனது இரட்டிப்பு வாழ்த்துக்கள். அருமையான ஆட்டம் விராட் கோலி அத்துடன் வாழ்த்துக்கள் பல..! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.