தஞ்சை திலகர் திடல் அருகே அம்மா மாலைநேர காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 54 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு எதிரே 34 கடைகள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு காய்கறி கடைகள், பழக்கடைகள், டிபன் கடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்தது.இந்த கடைகளால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் 34 கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை காலி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.
34 கடைகள் இடிப்பு
இதையடுத்து வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளில் இருந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்களை காலி செய்துவிட்டு வேறொரு இடத்திற்கு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் மாலைநேர காய்கறி மார்க்கெட்டிற்கு வந்தனர்.பின்னர் போக்குவரத்துக்கு நெரிசலாக இருந்த அந்த 34 கடைகளையும் பொக்லின் எந்திரம் மூலம் அலுவலர்கள் இடித்து அப்புறப்படுத்தினர். இந்த கடைகளுக்காக போடப்பட்டு இருந்த இரும்பு தகரம், இரும்பு கம்பிகளை பொக்லின் எந்திரம் மூலம் பிரித்தெடுத்து லாரிகளில் ஏற்றி சென்றனர்.