நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடி இமாலய வெற்றியை ருசித்தது.
சுப்மன் கில் 12 பவுண்டரி, 7 சிக்சருடன் 126 ரன்கள் விளாசினார். கடைசி ஆட்டம் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது.
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டப்பி நீக்கப்பட்டு, புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் இடம்பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});இதன்படி சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இஷான் கிஷன் (1 ரன்) பிரேஸ்வெல்லின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.
இதன் பின்னர் சுப்மன் கில்லுடன், ராகுல் திரிபாதி இணைந்தார். பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் இருவரும் ரன்மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
டிக்னெரின் ஓவரில் கில் 3 பவுண்டரி விரட்ட, பெர்குசன், சான்ட்னெர் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரியை திரிபாதி ஓடவிட்டார். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. கில் 33 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்தார்.
சுப்மன் கில் சதம் ஸ்கோர் 87-ஐ எட்டிய போது திரிபாதி 44 ரன்களில் (22 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) சோதியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் தனது பங்குக்கு 24 ரன்கள் (13 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});இதைத் தொடர்ந்து சுப்மன் கில்லுடன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கைகோர்த்தார். இதன் பிறகு ரன்வேகம் மேலும் சூடுபிடித்தது. லிஸ்டர், டிக்னெரின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டு கில் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். முன்னதாக 79 ரன்னில் இருந்த போது அவர் கொடுத்த மற்றொரு கேட்ச் வாய்ப்பையும் எதிரணியினர் நழுவ விட்டனர்.
கிடைத்த வாய்ப்புகளை சூப்பராக பயன்படுத்திக் கொண்ட சுப்மன் கில் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்தார். அவரது சரவெடியான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் 200-ஐ எளிதில் கடந்தது.
கடைசி ஓவரில் பாண்ட்யா 30 ரன்களில் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் 5-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதே சமயம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். சுப்மன் கில் 126 ரன்களுடன் (63 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே நிலைகுலைந்து போனார்கள். பின் ஆலென் (3 ரன்), டிவான் கான்வே (1 ரன்), மார்க் சாப்மேன் (0), கிளென் பிலிப்ஸ் (2 ரன்), பிரேஸ்வெல் (8 ரன்) ஆகியோர் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்து நடையை கட்டினர்.
இதில் ஸ்லிப்பில் நின்ற சூர்யகுமார் யாதவ் தாவிகுவித்து பிரமாதமாக பிடித்த இரு கேட்ச்சுகளும் அடங்கும்.
நியூசிலாந்து சுருண்டது இந்த வீழ்ச்சியில் இருந்து நிமிர முடியாமல் ஊசலாடிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் வெறும் 66 ரன்னில் சுருண்டது. 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும்.
இதன் மூலம் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது. நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் (35 ரன்), சான்ட்னெர் (13 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சுப்மான் கில் ஆட்டநாயகன் விருதையும், ஹர்திக் பாண்ட்யா தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, 20 ஓவர் போட்டி தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்க வைத்தது.
முன்னதாக தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோலியை முந்தினார் சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் குவித்த 126 ரன்களையும் சேர்த்து, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய தரப்பில் இதுவரை 13 சதங்கள் பதிவாகியுள்ளது. இதில் விராட் கோலி கடந்த ஆண்டு ஆசிய கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்ததே, சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்தியர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});அதை தற்போது சுப்மன் கில் முறியடித்துள்ளார். அத்துடன் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) சதம் அடித்த 5-வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைந்தார். ஏற்கனவே சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகிய இந்தியர்கள் இச்சாதனையை படைத்துள்ளனர்.
இந்தியாவின் சிறந்த வெற்றி நியூசிலாந்தை 168 ரன் வித்தியாசத்தில் புரட்டியெடுத்த இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக 143 ரன் வித்தியாசத்தில் வென்றதே 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றியாக இருந்தது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});