தஞ்சை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்குவதில் முரண்பாடுகள் ஏற்படுகிறது.
கடன் தர பல்வேறு கெடுபிடிகள் செய்வதை, தளர்த்தி கடந்த காலங்களில் வழங்கியது போன்று கடன் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத் தொகையான டன் ஒன்றுக்கு ரூ.195 உயர்த்தி வழங்க வேண்டும். சாலை சீரமைக்க வேண்டும் ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் புண்ணியமூர்த்தி:-
ஒரத்தநாடு ஒன்றியம் பாச்சூர் அருகே அய்யன்பட்டி-கீராத்தூர் சாலையில் 700 மீட்டர் நீளம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பாச்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் இருபுறமும் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனை சரி செய்து தர வேண்டும். ஆம்பலாபட்டு தங்கவேல்:-
ஆம்பலாபட்டு பகுதியில் வயல்பகுதி, குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதால் பெரும் ஆபத்து நேரிடும் வாய்ப்புள்ளது. கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு விதை நெல் தட்டுப்பாடு உள்ளதை உடனடியாக போக்க வேண்டும்.
புலவன்காடு மாரியப்பன்:- குறுவை நெல் கொள்முதலில் எவ்வித முறைகேடும் இல்லாமல் உரிய ஏற்பாடுகளை நிர்வாகம் செய்ய வேண்டும். ஒரத்தநாடு பகுதியில் ஏரிகளுக்கு நீர் வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதால், அதனை அகற்றி நீரை நிரப்ப வேண்டும். கக்கரை சுகுமார்:
குறுவை நெல் பயிருக்கு யூரியா உரம் தெளிக்க வியாபாரிகள் உரம் வேண்டுமென்றால் மைக்ரோபுட் எனப்படும் இணை உரம் வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்படும் என்கின்றனர். அதே நேரத்தில் கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் குறுவை தொகுப்பு திட்டத்துக்கும், பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்கின்றனர்.
எனவே கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகளை கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவில் தீர்க்கப்படும் என கோட்டாட்சியர் ரஞ்சித் உறுதியளித்தார்.