தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்புமுகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. சிறப்பு முகாம் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதுவரை 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2,305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடக்கிறது.
11 வகையான ஆவணங்கள் எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அவர்கள் வழக்கமாக வாக்குச்செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் அவர்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 6 (பி) -யை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகலை கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 100 நாள் வேலை அடையாள அட்டை, தபால், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு உள்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தை வழங்கலாம்.
எனவே வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று இரட்டை பதிவற்ற 100 சதவீத தூய்மையான வாக்காளர் பட்டியலை ஏற்படுத்துவதற்கு தங்களது முழு பங்களிப்பும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.