இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்த்து திணறி வந்தது.இன்று தொடங்கிய 3-வது நாள் போட்டியில் ஒருமுனையில் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாட மறுமுனையில் ஸ்டோக்ஸ் 25 ரன்களில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பேர்ஸ்டோ சவால் அளித்து வந்தார். பவுண்டரிகளாக விரட்டி அதிரடி காட்டிய அவர் 119 பந்துகளில் சதம் அடித்த அவர் 106 ரன்களில் ஷமி பந்துவீச்சில் வெளியேறினார்.தொடர்ந்து சாம் பில்லிங்ஸ் 36 ரன்களிலும் , பிராட் 1 ரன்களிலும் ,போட்ஸ் 19 ரன்களிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும் ,பும்ரா 3 விக்கெட்டும் ,ஷமி 2 விக்கெட்டும் ஷர்துல் தாக்குர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 132ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.