அதிர்ச்சி… நடிகர் பிரகாஷ் ராஜ் வந்ததால் கல்லூரி வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்!
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில். கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இது பற்றி அறிந்த மாணவர்களில் சிலர் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாகத்திற்குள் நடத்தலாம் என கேள்வி எழுப்பியதோடு, நடிகர் பிரகாஷ் ராஜிக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கல்லூரிக்கு வரக்கூடாது எனக்கூறினர். இதனையடுத்து, கல்லூரி வளாகம் முன் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்களிடம் போராட்டத்தை கைவிடக்கோரினர். ஆனால், மாணவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து, அவர்கள் கல்லூரிக்குள் நுழையாமல் இருக்க தடுப்புகளை கொண்டு மூடிய போலீசார், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரிக்கு சென்று சிறப்புரையாற்றினர். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து, மாணவர்களில் சிலர் கோமியம் எடுத்து சென்று நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்தனர். இதனை அவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த போராட்டம் குறித்து விளக்கமளித்துள்ள போலீசார் கல்லூரி அருகே நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமின்றி வேறு சிலரும் இருந்ததாக கூறியுள்ளனர். ஆனால், இதுவரை அவர்களது அடையாளம் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.