Site icon Thanjavur News

Widespread rain in Tanjore district

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது தஞ்சாவூர் கும்பகோணம் பகுதியில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழை சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக கும்பகோணம் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

பரவலாக பெய்த இந்த கன மழையால் குறுவை மற்றும் சம்பா பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் ஆதாரம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதேபோல, பட்டுக்கோட்டையில் சூறைக் காற்றுடன் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைந்து வந்தநிலையில் நேற்று பெய்த மழையினால் இரவு நேரத்தில் குளிர்ச்சி நிலவியது.

அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதேபோல் நேற்று மாலை 4.30 மணிக்கு சூறைக்காற்றுடன் பெய்யத்தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால், மின்தடை ஏற்பட்டது.

இந்த மழையின் காரணமாக நகரின் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கடலோர போலீஸ் நிலையம், சுப்பிரமணியர் கோவில் தெரு, சேதுரோடு, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதில் கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக அளவில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Exit mobile version