Site icon Thanjavur News

Who is the wicketkeeper who will play in the World Cup semi-final? Rohit’s action answer

அடிலெய்டு, ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் நாளை நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது.

அதில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக அடிலெய்டு மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து இந்திய அணிக்கு திரும்பிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் அணியின் விக்கெட் கீப்பராக முதல் 4 லீக் போட்டிகளில் செயல்பட்டார்.

கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளில் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் முதல் 4 போட்டிகளில் களமிறங்காத ரிஷப் பண்ட்-க்கு , ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனால் அரையிறுதியில் விளையாடப்போகும் விக்கெட் கீப்பர் யார் என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில் அதற்கு கேப்டன் ரோகித் அதிரடி பதில் அளித்துள்ளார். இது பற்றி இன்று நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

“தினேஷ் கார்த்திக் – பண்ட் விஷயத்தில் கடந்த போட்டியிலே நான் சொல்லி விட்டேன். இந்த தொடரில் பண்ட் மட்டுமே பெர்த் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளை தவிர்த்து எந்த போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார்.

அந்த பயிற்சி போட்டிகளுக்கு பின் அவர் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் அரையிறுதி அல்லது இறுதி போட்டிக்கு முன்பாக தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக ஜிம்பாப்வே போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஏனெனில் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திடீரென அரையிறுதி போன்ற முக்கிய போட்டியில் ஒருவரை விளையாட வைப்பது நியாயமற்றது. இருப்பினும் அரையிறுதி அல்லது லீக் என எந்த போட்டியாக இருந்தாலும் அதில் விளையாடுவதற்கு தயாராக இருக்குமாறு ஏற்கனவே எங்களது வீரர்களிடமும் கூறியுள்ளேன்.

இருப்பினும் மிடில் ஓவர்களில் சுழல் பந்து வீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்வதற்காக ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் நாளை என்ன நடைபெறும் என்பதை நான் இப்போதே சொல்ல முடியாது. இருப்பினும் நாளைய போட்டிக்கு 2 விக்கெட் கீப்பர்களும் தேர்வுக்கு தயாராக உள்ளனர்” என்று கூறினார்.

Exit mobile version