Site icon Thanjavur News

Traders Request to Continue the Flower Market

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் பூச்சந்தையைத் தொடா்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பூக்காரத் தெரு வியாபாரிகள், பொதுமக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் பூச்சந்தை 100 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது.

இதை நம்பி 500-க்கும் அதிகமான குடும்பங்கள் பூ கட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம். இதில் வியாபாரிகள் சிலா், சில காரணங்களுக்காக வெளியே சென்று வியாபாரம் செய்து வருகின்றனா்.

அவா்களை மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து வந்து, அதே இடத்தில் கடை நடத்தவும், வியாபாரிகளுக்குள் இணக்கமான உறவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியில் சென்ற வியாபாரிகள் வராத பட்சத்தில் பூச்சந்தையை நம்பி உள்ள அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

எனவே, இந்தப் பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அஞ்சலகத்தில் முறைகேடு: இதேபோல, பட்டுக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட சாந்தாங்காடு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

சாந்தாங்காடு கிளை அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பலரது சேமிப்பு புத்தகங்கள் எங்களிடம் இல்லை. சேமிப்பு புத்தகத்தில் வரவு வைக்க வேண்டும் என வாங்கிக் கொண்டு தரவில்லை. பலரது சேமிப்பு புத்தகத்தில் இருப்புத் தொகை வரவு வைக்கப்படாமல் உள்ளது. சிலரது கணக்கில் பணம் இல்லை என வருகிறது.

சேமிப்பு புத்தகத்தில் வரவு வைத்தும், வைக்காமலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Exit mobile version