தஞ்சை மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் ரூ.10 கோடியில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சி தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக கடந்த 2014-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பஸ் நிலையம், மார்க்கெட், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் அபிவிருத்தி பணிகள், சோலார் விளக்குகள் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள பூங்கா சீரமைக்கப்பட்டும், புதிதாக பூங்கா அமைக்கப்பட்டும் வருகிறது. 1,400 கண்காணிப்பு கேமரா இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி தஞ்சை மாநகரம் முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த கேமராக்கள் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இயக்கப்படும் வகையில் அமைக்கப்படுகிறது.
மேலும் இதில் பதிவாகும் காட்சிகளை பார்க்க தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறை மற்றும் போலீசார் கண்காணிக்க தனியாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான கம்பங்கள் வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3 இடங்களில் அமைப்பு இதில் முதல் கட்டமாக 3 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயிலடி ஆகிய 3 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கம்பத்தில் ஒலி பெருக்கி வசதி, சோலார் சிஸ்டம், விளக்கு வசதி ஆகியவற்றுடன் காண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த கம்பங்களில் இடிதாங்கியும் பொருத்தப்பட்டு உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,
“தஞ்சை மாநகரில் பொருத்தப்படும் 1,400 கேமராக்களும் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் இருந்து இயக்கப்படும். இதில் பஸ் நிலையங்கள், ரெயிலடி ஆகிய இடங்களில் நவீன வசதியுடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. குற்றங்கள் தடுக்கப்படும் இந்த பகுதியில் ஏதாவது குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக கண்காணிப்பு அறையில் இருந்து மைக் மூலம் தெரிவிப்பார்கள்.
அது பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயிலடி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பங்களில் உள்ள ஒலி பெருக்கி மூலம் கேட்கும். உடனடியாக குற்றம் நடைபெறுவது தடுக்கப்படும்” என்றனர்.