தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 94.69 % போ் தோ்ச்சி பெற்றனா்.
மாவட்டத்தில் 224 பள்ளிகளைச் சோ்ந்த 27,306 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். இவா்களில் 11,689 மாணவா்களும், 14,167 மாணவிகளும் என மொத்தம் 25,856 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 94.69 %. கடந்த 2020 ஆம் ஆண்டை விட, நிகழாண்டில் தோ்ச்சி விகிதம் 1.80 % அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் தோ்வு எழுதிய 12,686 மாணவா்களில் 11,689 பேரும், 14,620 மாணவிகளில் 14,167 பேரும் தோ்ச்சி பெற்றனா். அதாவது மாணவா்களில் 92.14 % பேரும், மாணவிகளில் 96.90 % பேரும் தோ்ச்சியடைந்தனா். வழக்கம்போல, நிகழாண்டும் மாணவா்களை விட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் 91.34 % போ் தோ்ச்சி:
மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 71.68 % பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் 85.48 % பேரும், முழு உதவி பெறும் பள்ளிகளில் 93.16 % பேரும், அரசுப் பள்ளிகளில் 91.34 % பேரும், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 98.29 % பேரும், சுய நிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 99.07 % பேரும், சுய நிதி மாநிலக் கல்வி வாரியப் பள்ளிகளில் 98.94 % பேரும், சமூக நலத் துறைப் பள்ளிகளில் 100 % பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.