Site icon Thanjavur News

South Africa beat England to clinch the series.

தென் ஆப்பிரிக்கா அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சவுத்தாம்ப்டன், தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இதையடுத்து நடந்த டி20 தொடரின் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 70 ரன்களை எடுத்தார். மார்க்ரம் 51 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 17 ரன், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் 14 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இங்கிலாந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷம்சி 5 விக்கெட்டும், மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 2-1 என டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

ஆட்ட நாயகன் விருது ஷம்சிக்கும், தொடர் நாயகன் விருது ஹென்ரிக்சுக்கும் அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்க உள்ளது.

Exit mobile version