Site icon Thanjavur News

Rs. 1000 Pongal gifts will be distributed in ration Shops According to Chief Minister M.K.Stalin. 

சென்னை: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் முழுக் கரும்பு பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்காக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொருவருக்கும் 6 அடி உயரம் உள்ள செங்கரும்பு தோகையுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் 500 ரூபாய் தாள்கள் 2 கையில் கொடுக்க வேண்டும் என்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை தரமானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு தெருக்கள் வாரியாக எப்போது வந்து மக்கள் பொங்கல் பரிசை வாங்க வரவேண்டும் என்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 93 சதவீதம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுவிட்டது.

பூட்டிய வீடுகள், வெளியூர் சென்றவர்கள் என ஒரு சிலருக்குத்தான் இன்னும் டோக்கன் சென்றடையவில்லை.

டோக்கன் இல்லாதவர்கள் 13-ந்தேதி சென்று பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுத்தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்களுக்கும் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று முழுக்கரும்பு மற்றும் பணம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்கப்படுவதையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு கோட்டைக்கு செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அந்த கடையில் உள்ள பொதுமக்கள் 20 பேருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 பணத்துடன் ஒரு முழு கரும்பு ஆகியவற்றையும் தனது கையால் வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதேபோல் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்க உள்ளனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உள்ள சர்தார்ஜன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்குகிறார்.

ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள 2 ரேசன் கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை ஒதுக்கி கட்டிடத்தை புதுப்பித்து கட்டி இருந்தார். அந்த கடைகளை திறந்து வைத்து பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்க உள்ளார்.

Exit mobile version