கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைகிறது. கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால், கொள்ளிடம் மற்றும் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தநிலையில் உபரி தண்ணீர் அணைக்கரை கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கரை வீராகண் ஊராட்சி வாண்டையார் இருப்பு பகுதியில் கொள்ளிடம் கரையோரம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நீர்வளத்துறையின் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீட்பு மேலும், அணைக்கரை விநாயகன் தெரு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.