தஞ்சை மாநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த 100 இடங்களில் வருகிற 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. முகாமை 3 அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்றுமாலை நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி பேசியதாவதுமாநகர பகுதிகளில் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28 பேர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் இல்லை. ஆக்சிஜன் வசதியுடன் எல்லா ஆஸ்பத்திரியும் தயார் நிலையில் உள்ளது. 10-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம் காய்ச்சல் யாருக்காவது இருந்தால் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.
இவர்களின் வசதிக்காக வருகிற 10-ந் தேதி தஞ்சை மாநகரில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளது.60 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 10-ந் தேதி நடைபெறும் முகாமில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்கின்றனர். முகாம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்டோ மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிறைய பேருக்கு காய்ச்சல் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி பேசும்போது, நிறைய பேருக்கு காய்ச்சல் வந்து கொண்டு இருக்கிறது.
வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வருபவர்களை கண்டறிய வேண்டும். 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு கண்டிப்பாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றார்.கூட்டத்தில் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.