Site icon Thanjavur News

Maximum 36 mm in Thanjavur It Rained

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக 36 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழையால் நெல் மற்றும் உளுந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திடீர் மழை

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் மழை பெய்தது. இந்த மழையில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டது. இதே போல் அறுவடைக்கு தயாரான உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மதியத்துக்குப்பிறகு வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. அரைமணி நேரம் இந்த மழை நீடித்தது. அறுவடை பணிகள் பாதிப்பு இந்த மழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை கொட்டியது.

இந்த மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து பயிர்களும் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை முதல் மழை இன்றி வெயில் காணப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தஞ்சை 36, ஒரத்தநாடு 23, பூதலூர் 18, பாபநாசம் 14, அய்யம்பேடடை 12, குருங்குளம் 11, அணைக்கரை 8, வல்லம் 7, திருக்காட்டுப்பள்ளி 5, திருவையாறு 3, நெய்வாசல் தென்பாதி 3, திருவிடைமருதூர் 2, மஞ்சளாறு 1, ஈச்சன் விடுதி 1.

Exit mobile version