Site icon Thanjavur News

Mamannan Rajarajacholan’s 1037th Sadaya Festival

தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037-வது சதய விழா நடைபெற உள்ளதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது.

தஞ்சை பெரியகோவில் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் வருகிற 3-ந் தேதி வருவதால், அவரது 1037-வது ஆண்டு சதய விழா அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

சதய விழா ராஜராஜசோழனின் சதய விழாவை முன்னிட்டு வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 3-ந் தேதி காலை தேவாரநூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது. பின்னர் பெரிய கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம்,

மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். பந்தக்கால் முகூர்த்தம் தொடர்ந்து ராஜராஜசோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி, பின்னர் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தவுள்ளனர்.

அன்று இரவு ராஜராஜசோழன் மற்றும் உலோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் விழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

Exit mobile version