‘இளநீர் பாயசம்’. இது இளம் தேங்காய், தேங்காய்ப்பால், இளநீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.
இந்தப் பாயசத்தை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான உடல் வெப்பம், மலச்சிக்கல், வயிற்றுப்புண், நீர்க்கடுப்பு ஆகிய பிரச்சினைகள் குணமாகும். இளநீர் பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இளநீர் – 250 மில்லி லிட்டர்
இளம் தேங்காய் – 250 கிராம்
பால் – ½ லிட்டர்
சர்க்கரை – 250 கிராம்
மில்க்மெய்ட் – 1 கப்
சாரைப்பருப்பு – 3 டீஸ்பூன்
முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 10 ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன்
பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை
Also Read – மாங்காய் பச்சடி
நெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரிக்கவும். பின்பு முந்திரி, பாதாம், பிஸ்தா இவற்றை பொடிதாக நறுக்கவும். இளம் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதை மிக்சியில் போட்டு சிறிது பாலூற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின்பு அதில் இளநீரை சேர்த்துக் கலக்கவும். அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடுபடுத்தவும். அதில் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
பிறகு அதில் பச்சைக்கற்பூரம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியில் நெய் ஊற்றி சாரைப்பருப்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பின்பு அவற்றைப் பாலில் சேர்த்து கலக்கவும். 10 நிமிடங்கள் கழித்து பாலை அடுப்பில் இருந்து இறக்கவும்.
பால் அறை வெப்பநிலைக்கு வந்ததும், அதில் இளநீர் மற்றும் இளம் தேங்காய் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, 2 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான ‘இளநீர் பாயசம்’ தயார்.