அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உதவி இயக்குனர்கள் பழனிவேல் (நோய் புலனாய்வு பிரிவு), சையதுஅலி, கால்நடை உதவி மருத்துவர் செரீப் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்க்கும் இடத்திற்கு சென்று பன்றிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? நோய் அறிகுறிகள் எதுவும் தென்படுகின்றனவா? என ஆய்வு மேற்கொண்டனர். பன்றி காய்ச்சல் பரவும் விதம், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.