Site icon Thanjavur News

India defeated Sri Lanka in the last match and won the T20 series!

ராஜ்கோட், இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் மும்பையில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் யாரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது.

இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியிம் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை அணியில் பனுகா ராஜபக்சேவுக்கு பதிலாக அவிஷ்கா பெர்ணாண்டோ இடம் பிடித்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர்.

இந்தப்போட்டியை கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் இறங்கிய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் இஷன் கிஷன் முதல் ஓவரிலேயே 1 ரன் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து ராகுல் திரிபாதி களம் இறங்கினார். பவர்பிளே வரை அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 16 பந்தில் 35 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதையடுத்து கில்லுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய சூர்ய குமார் யாதவ் மைதானத்தின் நாலாப்புறமும் சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைந்தார.

அதிரடியாக ஆடிய அவர் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மறுபுறம் சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில் 36 பந்தில் 46 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் தனது 3வது சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நிசங்கா, 15 ரன்னிலும் குசல் மெண்டிஸ் 23 ரன்னிலும் வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பெர்னண்டோ 1 ரன்னில் வெளியேறினார். தனஞ்ஜெய டி சில்வா 22 ரன்னிலும், அசலங்கா 19 ரன்னிலும், கேப்டன் தசன் ஷனகா 23 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

இறுதியில், 16.4 ஓவரில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இலங்கையை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா தரப்பில் சிரப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், ஹர்திக் பாண்டியா, சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version