தஞ்சாவூர் கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் நேற்று மாலை நிலவரப்படி அந்த அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் கன அடி தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு தடுப்பணையில் இருந்து காவிரி ஆற்றில் 56,254 கன அடியும் கொள்ளிடத்தில் 90,405 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 7,003 கன அடி, வெண்ணாற்றில் 7,005 கன அடி, கல்லணை கால்வாயில் 2,219 கன அடியும், கொள்ளிடத்தில் 43,915 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கொள்ளிடத்தில் மொத்தமாக மழை தண்ணீர் எல்லாம் சேர்ந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது. கல்லணையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் தரைமட்ட வடிகால் பகுதியில் காவிரியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
கண்காணிப்பு இதனால் திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் பூண்டி மாதாகோவில் பிரிவு சாலை அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். கொள்ளிடம் ஆற்றில் அலமேலுபுரம் பூண்டி வடிகால் வாய்க்கால் வழியாக கொள்ளிடம் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்ததால் மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீர் புகுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலடி பள்ளி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சி துறை, நீர்வள ஆதார துறையினர் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து கரைகளின் தன்மை உள்ளிட்டவைகளை கண்காணித்து வருகின்றனர்.