Site icon Thanjavur News

Houses in Ayyampettai were flooded due to rising water in the Kollidam River.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொள்ளிடத்தில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் அய்யம்பேட்டை அருகே உள்ள கிராம பகுதிகளை வந்தடைந்தது. தொடர்ந்து தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.

வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது இந்தநிலையில் நேற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அய்யம்பேட்டை அருகே கூடலூர் கிராமத்தில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

மேலும் தற்போது நடவு செய்துள்ள குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கின. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு இந்தநிலையில், அய்யம்பேட்டை அருகே வெள்ள பாதிப்பு ஏற்பட்ட கரையோர பகுதிகளான பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு ஆகிய கிராமங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நிவாரண மையங்களை அவர் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாகி கொண்டு இருக்கிறது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே பாதுகாப்பாக நிவாரண மையங்களில் தங்க வேண்டும். அவர்களுக்கான தேவையான உணவு வழங்கப்படும். பள்ளி மாணவர்கள், வாலிபர்கள் ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ செல்லக் கூடாது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னையும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டுக் கொண்டார். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்யப்படும் என்றார். அப்போது அவருடன் தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வருவாய் கோட்டாட்சியர் லதா, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ.,

பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி, ரமேஷ் பாபு, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version