Site icon Thanjavur News

Free housing for 7 people in Thanjavur

அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் 7 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தஞ்சாவூர் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருபவர்களில் சிலருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா விரைவில் கிடைத்து விடும். ஆனால் சிலருக்கோ இந்த வீட்டுமனைப்பட்டாவானது 2 அல்லது 3 தலைமுறைகளுக்கு பிறகு தான் கிடைக்கிறது.

அப்படி 3 தலைமுறைகளாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வந்த குடும்பத்தினருக்கு தற்போது இலவச வீட்டுமனைப்பட்டா கிடைத்து இருக்கிறது. அதன்விவரம் வருமாறு:- தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி வள்ளுவர்தெரு பகுதியில் 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தலைமுறை, தலைமுறையாக இந்த இடத்தில் தான் வசித்து வருகின்றனர்.

அரசு புறம்போக்கு இடத்தில் மண் சுவரால் ஆன குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த இடத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு பட்டா இல்லாத காரணத்தினால் அரசு மானியத்தின் மூலம் கான்கிரீட் வீடு கட்டக்கூட முடியாமல் தவித்து வந்தனர்.

இவர்கள் அனைவரும் கூடை மற்றும் முறம் பின்னும் தொழில் செய்ததுடன், தூய்மை பணியையும் மேற்கொண்டு வந்தனர். பின்னப்பட்ட கூடை மற்றும் முறத்தை தஞ்சை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள ஊர்களுக்கு சென்று விற்பனையும் மேற்கொண்டு வந்தனர். இவர்கள் தங்களுக்கு பட்டா பெற்று தர வேண்டும் என பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமாரிடம் மனு அளித்தனர்.

இவர் உடனடியாக கலெக்டர் மற்றும் வருவாய்த்துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் வந்து விளிம்புநிலை மக்கள் குறித்து ஆய்வு செய்தார். இதையடுத்து 7 பேருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் 7 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு விளிம்புநிலை மக்கள் மேம்படுத்துதல் திட்டத்தன்கீழ் இலவச வீட்டுமனைப்பட்டாவை வல்லத்தில் நடந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்றுமுன்தினம் வழங்கினார். நெகிழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு பட்டாவை பெற்று கொண்ட அந்த 7 குடும்பத்தினரும் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தனர். இவர்கள் கலெக்டர், ஊராட்சி மன்ற தலைவர், அரசு அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார் கூறும்போது, பட்டாவுக்காக பல ஆண்டுகள் போராடிய மக்களுக்கு தற்போது அரசின் உதவியுடன் கிடைத்து இருக்கிறது.

பட்டா கிடைக்க உறுதுணையாக இருந்த கலெக்டர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இன்னும் 22 பேருக்கு விரைவில் பட்டா பெற்று தரப்படும் என்றார்.

Exit mobile version