தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அறுவடை செய்த நெல் நனைந்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொள்முதலில் 22 சதவீத ஈரப்பதம் வரை தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்றுஅதிகாலை வரை அவ்வப்போது மழை பெய்தது.
மழையின் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் சிரமத்துடன் பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று ஒரு நாள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் இதனால் தொழிலாளிகள் கவலை அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்களில் இதுவரை 85 சதவீதம் அறுவடை பணி நிறைவடைந்துள்ளது.அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ளனர்.
மீண்டும் மழை இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் நெல் மணிகள் ஈரமானது. ஏற்கனவே 17 சதவீத ஈரப்பதம் அளவு இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஈரமான நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
இடையில் மழை சற்று ஓய்ந்து வெயில் அடித்ததால் மழையில் நனைந்த நெல்லை சாலைகளில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகள் விற்பனை செய்தனர். இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. ஈரப்பதம் அதிகரிப்பு இதனால் அறுவடை செய்யப்பட்டு கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் நனையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடி வைத்து இருந்தாலும் மழைநீர் ஊடுருவி ஈரப்பதம் அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் களிமேடு, வண்ணாரப்பேட்டை, ஒரத்தநாடு, ஆலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டு இருந்த நெல்மணிகள் நனைந்துள்ளது.