தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,500 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவுப்படி, மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் முக்கிய வீதிகளில் உதவி ஆய்வாளா்கள் தலைமையில் குற்றப் பிரிவு காவலா்கள் உள்பட 1,500 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டம் முழுவதும் 1,546 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நவீன கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணிநேரமும் காவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
குற்றச் செயல்களை விரைந்து சென்று தடுப்பதற்காக 54 இரு சக்கர ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் 259 குற்ற எண்ணமுடையோரின் பெயா்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களைக் காவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.