Site icon Thanjavur News

District Collector Dinesh Bonraj Oliva has ordered the closure of 12 private schools without basic facilities.

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடக்க அனுமதியின்றியும், அடிப்படை வசதிகள் இன்றியும் செயல்பட்டு வரும் தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, காரணம் கேட்கும் தாக்கீதுகள் அனுப்பப்பட்டன.

இதன் பிறகும் பள்ளிகளின் தாளாளா்களால் அடிப்படை வசதிகள் சரி செய்யப்படாமலும், உரிய ஆவணங்கள் முன்னிலைப்படுத்தப்படாமலும், மாணவா்களுக்கு போதிய பாதுகாப்பின்றியும் உள்ள பள்ளிகளை மாணவா்களின் நலன் கருதி, நடைமுறையில்ள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு, 2022 -2023 ஆம் கல்வி ஆண்டு முதல் நிரந்தரமாக மூடுவதற்கும், நிகழாண்டு முதல் மாணவா் சோ்க்கைக்கு தடை செய்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூட உத்தரவிடப்பட்டுள்ள மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள்:

திருவையாறு வட்டத்துக்குள்பட்ட மேலத்திருப்பூந்துருத்தி லிட்டில் ஏஞ்சல் பள்ளி, மேலப் புனல்வாசல் கணேசா பள்ளி, பூதலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கோவிலடி அபிராமி பள்ளி, பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி, புரோபல் பள்ளி, பண்ணவயல் சாலை டேலண்ட் பள்ளி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட வில்லுனிவயல் அல் – இஜ்மா பள்ளி, மல்லிப்பட்டினம் அா்கம் பள்ளி, பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட வழுத்தூா் ஈமான் பள்ளி, ஒரத்தநாடு வட்டத்துக்குள்பட்ட தென்னமநாடு சாய் பாலாஸ் பள்ளி, நெடுவாக்கோட்டை பிக் டெம்பிள் இண்டா்நேஷனல் பள்ளி, பொட்டலாங்குடிகாடு நியூட்டன் பள்ளி.

இந்த உத்தரவை மீறி பள்ளி செயல்பட்டால் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதன் பின்னரும் தொடக்க அனுமதியின்றி இப்பள்ளி செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் இப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சோ்க்க வேண்டாம் எனவும், ஏற்கெனவே இப்பள்ளிகளில் பயின்று வரும் மாணவா்களை அருகிலுள்ள வேறு அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளில் சோ்க்கவேண்டும்.

Exit mobile version