Site icon Thanjavur News

Collector Dinesh Ponraj Oliver said that 251 relief centers are ready in Tanjore district in response to the storm warning.

தஞ்சாவூர் புயல் எச்சரிக்கை எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள் தயாராக உள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (அதாவது இன்று) புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதால் 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

251 நிவாரண மையங்கள் புயல் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள், 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 7 புயல் பாதுகாப்பு மையங்கள், 30 படகுகள், 143 கனரக எந்திரங்கள், 617 அரவை எந்திரங்கள், 99 மரம் வெட்டும் எந்திரங்கள், 113 ஜெனரேட்டர்கள், 37 தண்ணீர் வெளியேற்றும் எந்திரங்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 325 மணல் மூட்டைகள், 30 ஆயிரத்து 672 தடுப்பு கம்புகள் தயார் நிலையில் உள்ளன.

4 ஆயிரத்து 700 பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இலவச அழைப்பு எண்: 1077 மற்றும் செல்போன் எண்கள்: 04362-264115, 264117 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

வருவாய் கோட்ட அலுவலகத்திலும், தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Exit mobile version