தஞ்சாவூர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைகிறது.
அந்த தண்ணீர் கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணற்போக்கி 5 ஷட்டர்கள் உள்பட 35 ஷட்டர்களில் இருந்தும் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி கல்லணையில் இருந்து 41 ஆயிரத்து 240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது.
நேற்று முன்தினம் 50ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறக்கப்படும் அளவு சற்று குறைந்தது. சுற்றுலா பயணிகள் இதேபோல, கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 8,004 கன அடி, வெண்ணாற்றில் 8007 கன அடி, கல்லணை கால்வாயில் 2,608 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கல்லணை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறக்கப்படுவதால் கொள்ளிடம் மதகுகளின் கீழ் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் உள் நுழைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கல்லணைக்கு சுற்றுலா வந்த பயணிகள் கல்லணை பாலங்கள் மேல் நின்று தண்ணீர் சீறிப் பாய்ந்து வெளியேறும் அழகை கண்டுகளித்தனர்.