Site icon Thanjavur News

Buses and trains are crowded with people who flock to their hometowns to celebrate Diwali.

தீபாவளி பண்டிகை இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும் தான் தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் மக்கள் அதற்காக தயாராகி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே துணி கடைகள், இனிப்பு கடைகள், பட்டாசு கடைகளில் விற்பனை களை கட்ட தொடங்கியது. அதேபோல் பட்டாசு கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்க ஆரம்பித்தனர்.

சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பு

அவ்வப்போது மழை வந்து தீபாவளி விற்பனைக்கு இடையூறு செய்தாலும் மழை நின்ற பிறகு மீண்டும் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

இவர்கள் ரெயில்கள் மூலமாகவும், பஸ்கள் மூலமாகவும் தங்களது ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர்.தீபாவளி பண்டிகையை கொண்டாட பஸ்கள் மூலமாக சொந்த ஊருக்கு பயணம் செய்யும் மக்களுக்கு ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருச்சியில் இருந்தும் தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் காத்திருப்பு இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு வசதியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வேலைக்காக வந்துள்ள தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் கூட்டம் அதிகஅளவில் இருந்தது. ஆனால் அதற்கு ஏற்ப தஞ்சையில் இருந்து மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் நீண்டநேரம் மக்கள் காத்து இருந்தனர்.மதுரைக்கு செல்லக்கூடிய பஸ்களை பார்த்தவுடன் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஓடி சென்று பஸ்களில் ஏறுவதற்கு முயற்சி செய்தனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் பஸ்களில் ஏறினாலும் அங்கே இருப்பதற்கு இடம் இல்லை.

தஞ்சையில் இருந்து மதுரை நோக்கி சென்ற எல்லா பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. படிக்கட்டுகளில் நின்று கொண்டும் மக்கள் பயணம் செய்தனர். பயணிகள் புகார் இதேபோல் பட்டுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் மக்கள் அதிகஅளவில் காத்து இருந்தனர். ஆனால் மக்களுக்கு தேவையான அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை.

பெரும்பாலான பஸ்கள் சென்னைக்கு இயக்கப்பட்டதால் உள்ளூர் பகுதிகளில் போதுமான அளவு பஸ்கள் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்தனர்.இதேபோல் தஞ்சை வழியாக சென்ற ரெயில்களிலும் மக்கள் அதிகஅளவில் பயணம் செய்து சொந்த ஊருக்கு சென்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்த காரணத்தினால் பஸ்கள், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

Exit mobile version