Site icon Thanjavur News

Argentina makes it to the World Cup Final for the Sixth Time!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது. தோகா, கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.

32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டியதால் களத்தில் சூடுதெறித்தது.

இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.

அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில் தங்கள் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றார்.

இதன்மூலம் போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி முன்னிலை வகித்தது. தொடர்ந்து அனல் பறந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் 2-வது முறையாக ஜூலியன் அல்வாரஸ் தனது அணிக்கான மூன்றாவது கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்து நடந்த போட்டியில் கோல் அடிக்க குரேஷியா அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் குரேஷியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.

1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அரைஇறுதியில் ஒரு போதும் வீழ்ந்ததில்லை. அந்த பெருமையோடு 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

முன்னதாக உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினா லீக் சுற்றில் தொடக்கத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதன் பிறகு மெக்சிகோ, போலந்தை தோற்கடித்து நாக்-அவுட் சுற்றை எட்டிய அர்ஜென்டினா 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை விரட்டியது. வாக்குவாதம், மோதல், நடுவரின் இடைவிடாது எச்சரிக்கை என்று அனல் பறந்த கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி இருந்தது.

Exit mobile version