குறுவை தொகுப்பு திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.