Site icon Thanjavur News

After two years, the Aadiperku festival returns to Thanjavur district. The Aadiperku festival on the banks of the river Cauvery

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் ஆடிப்பெருக்கு என்னும் மங்கள விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளில் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு நேற்றுகாலை முதலே பெண்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர்.

விளக்கேற்றி வழிபாடு பின்னர் பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், மலர், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர்.

தொடர்ந்து மாவிளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைபொருட்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன் மஞ்சள் பிள்ளையாருக்கும், காவிரி தாய்க்கும் தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.

மஞ்சள் கயிறு வழிபாடு முடிந்தவுடன் புத்தாடை அணிந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து திருமணத்தின்போது தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை பைகளில் பத்திரமாக கொண்டு வந்து அவற்றை காவிரி ஆற்றில் புதுமண தம்பதியினர் விட்டனர்.

சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர். அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், நல்ல மணமகன் கிடைக்க வேண்டியும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர்.

திருமணமாகாத ஆண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிற்றை கைகளில் கட்டிக்கொண்டனர். வேப்பமரம்-அரசமரம் புதுப்பெண்களுக்கு தாலியை பிரித்து கட்டும் நிகழ்வும் காவிரி படித்துறையில் நடந்தது. திருமணத்தின்போது கட்டப்பட்டிருந்த தாலிக்கு பதிலாக புது தாலியை அணிந்து கொண்டனர். பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.

தொடர்ந்து படித்துறை அருகில் உள்ள வேப்பரம், அரசமரங்களை மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் சுற்றி வந்து நாகர் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமத்தை வைத்து மஞ்சள் கயிற்றை கட்டி விட்டு, நாகர், சந்தான கணபதி, சோமசுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பின்னர் சாமிக்கு படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி மற்றும் பழ வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். சிறுவர்கள் சிறிய சப்பரங்களை இழுத்து வந்து மகிழ்ந்தனர். முன்னதாக அம்மனுடன் ஐயாறப்பர் பல்லக்கில் எழுந்தருளி படித்துறைக்கு வந்தார்.

அங்கு அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. ஆடிப்பெருக்கையொட்டி திருவையாறு புஷ்ய மண்டப படித்துறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் தீயணைப்பு வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version